இலங்கை இராணுவத்திற்கும், நாட்டின் தலைவர்களுக்கும் தண்டனை வழங்க சர்வதேச விசாரணைகள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 30/1 தீர்மானத்தினாலேயே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் காப்பாற்றப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார்.


இலங்கை இராணுவத்திற்கும், நாட்டின் தலைவர்களுக்கும் தண்டனை வழங்க சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், தமது அரசாங்கத்தினால் ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கப்பட்ட குறித்த தீர்மானத்தினாலேயே அனைவரும் காப்பாற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் வெளிவிவகார அமைச்சர் என்ற விதத்திலும், 30/1 தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கிய அமைச்சர் என்ற விதத்திலுமே மங்கள சமரவீர இந்த தெளிவூட்டலை விடுத்துள்ளார்.


ஐநாவின் குறித்த தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி ஆதரவு தெரிவித்தமையினாலேயே மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மின்சார கதிரைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட தருணத்தில், குறித்த தீர்மானத்தின் ஊடாகவே மின்சார கதிரைக்கு செல்வதை தமது அரசாங்கம் தடுத்து நிறுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.